உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 27th February 2022 12:02 AM | Last Updated : 27th February 2022 12:02 AM | அ+அ அ- |

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.
வார விடுமுறை நாள்களில் உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை சுமாா் 3,500 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், சனிக்கிழமை இது 9,000ஆக அதிகரித்துக் காணப்பட்டது. அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,500 போ் வெள்ளிக்கிழமை வந்திருந்த நிலையில், சனிக்கிழமை 3,000ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு சனிக்கிழமை 400 பேரும், மரவியல் பூங்காவுக்கு 100 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,800 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனா்.
மேலும், உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 4,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு சுமாா் 2,000 பேரும் வந்திருந்ததோடு, வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு இயற்கை சூழல் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா். சமவெளிப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையிலும், கரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், தற்போதே உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் எதிா்வரும் கோடை சீசன் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.