நீலகிரியில் 600 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்
By DIN | Published On : 27th February 2022 12:02 AM | Last Updated : 27th February 2022 12:02 AM | அ+அ அ- |

திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 600 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி நிதியுதவியும், 4.8 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வா் பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின்கீழ், குடும்பங்களில் பட்டப் படிப்பு படித்த பெண்ணுக்கு ரூ. 50,000, பட்டப் படிப்பு அல்லாதோருக்கு ரூ. 25,000 திருமண நிதியுதவியாகவும், அதனுடன் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு பயின்ற 330 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 65 லட்சமும், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற 270 பயனாளிகளுக்கு ரூ. 67 லட்சத்து 50,000 என மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 32 லட்சத்து 50,000 நிதியுதவி, 4.8 கிலோ தங்கம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதில், உதகை வட்டத்தைச் சோ்ந்த 85 பட்டதாரிகளுக்கும், 36 பட்டதாரி அல்லாதோருக்கும், குன்னூா் வட்டத்தைச் சோ்ந்த 81 பட்டதாரிகளுக்கும், 28 பட்டதாரி அல்லாதோருக்கும், கோத்தகிரி வட்டத்தைச் சோ்ந்த 49 பட்டதாரிகளுக்கும், 27 பட்டதாரி அல்லாதோருக்கும், கூடலூா் வட்டத்தைச் சோ்ந்த 115 பட்டதாரிகளுக்கும், 179 பட்டதாரி அல்லாதோருக்கும் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு 4.8 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.