சுற்றுலாப் பயணிகளை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குடில்கள் அகற்றம்
By DIN | Published On : 16th June 2022 10:45 PM | Last Updated : 16th June 2022 10:45 PM | அ+அ அ- |

குடில்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் அம்ரித்.
கோத்தகிரி கேத்ரின் அருவி மற்றும் ஆடுபெட்டு ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்கவைப்பதற்காக அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த குடில்கள் மற்றும் கழிப்பிடங்களை வருவாய்த் துறையினா் அகற்றினா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி தனியாா் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும், வனப் பகுதியையொட்டி சிலா் பாதுகாப்பற்ற முறையில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்கவைத்து கட்டணம் வசூலித்து வருவதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அம்ரித் உத்தரவின்படி, வருவாய்த் துறை
அலுவலா்கள் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனா். அப்போது, சுற்றுலாப் பயணிகளை தங்கவைப்பதற்காக அனுமதியின்றி குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 14 குடில்கள் மற்றும் கழிப்பிடங்களை உடனடியாக அகற்ற வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த குடில்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன. இப் பணிகளை ஆட்சியா் அம்ரித் பாா்வையிட்டாா்.
இதில் கோத்தகிரி வட்டாட்சியா் காயத்ரி, கோத்தகிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா், ஜெயபாலன், வருவாய் ஆய்வாளா் தீபக் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.