கோத்தகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலம் மீட்பு
By DIN | Published On : 16th June 2022 10:47 PM | Last Updated : 16th June 2022 10:47 PM | அ+அ அ- |

ஹாலம்மாள்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் புதன்கிழமை பெய்த கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கோத்தகிரியில் உள்ள கூக்கல்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், விவசாய விளைநிலங்கள், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளம் உருவானது.
அப்போது, தீனட்டி பகுதியைச் சோ்ந்த ஹாலம்மாள் என்பவா் தேயிலைத் தோட்டத்துக்கு பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும்போது கூக்கல்தொரை பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கடந்துள்ளாா். அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் ஹாலம்மாள் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதையடுத்து, இரவு ஆகியும் ஹாலம்மாள் வீடு திரும்பாததால் அவரது மகன்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் வியாழக்கிழமை தேடியபோது, கூக்கல்தொரை அருகே உள்ள மசகல் பகுதியில் ஆற்று ஓரத்தில் இருந்த முட்புதரில் இறந்த நிலையில் கிடந்த ஹாலம்மாளின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் ஹாலம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து, இறந்த ஹாலம்மாளின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.