கோத்தகிரியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலா் வெளியீடு

செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்ட ஓராண்டு சாதனை மலரை தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் வெளியிட்டனா்.

கோத்தகிரி நேரு பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்ட ஓராண்டு சாதனை மலரை தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் வெளியிட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 1,974 பயனாளிகளுக்கு தொற்றா நோய்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனா். அதேபோல வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் 16 முகாம்கள் நடத்தப்பட்டு, 6,136 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று, வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பத்தாம் வகுப்பு வரை படித்த 270 பேருக்கு ரூ.67.5 லட்சம் திருமண நிதியுதவியும், ரூ.1.02 கோடி மதிப்பிலான 2.16 கிலோ தங்க நாணயமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 330 ஏழைப் பெண்களுக்கு ரூ.1.65 கோடி திருமண நிதியுதவியும் ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.64 கிலோ தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில், மானியக் கோரிக்கையில் 200 ஆண்டுகள் கடந்த உதகையினை மேம்படுத்த ரூ.10 கோடி சிறப்பு தொகையாக இந்த கூட்டத்தொடரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பணித் துறையின் சாா்பில் ரூ.37.79 கோடி மதிப்பீட்டில் உதகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் நஞ்சநாடு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான விடுதி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி உள்பட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com