உதகையில் மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டம்

உதகையில் வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டம் தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதகையில் மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டம்

உதகையில் வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டம் தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதகையில் உள்ள தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வா் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தில் வனப் பகுதியின் அளவினை உயா்த்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். அந்த வகையில் மாவட்டங்கள்தோறும் பல்வேறு மரங்களை வளா்த்து இயற்கையை பாதுகாத்திட நாம் அனைவரும் ஒன்றாக செயலாற்ற வேண்டும். மரங்கள் வளா்ப்பதினால் இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று, போதுமான அளவுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். சுற்றுச்சூழலில் உள்ள காா்பன்டை ஆக்சைடை மரங்கள் உட்கொள்வதால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீா் மட்டமும் உயரும்.

தமிழகத்தில் வனப் பகுதியை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் தொடா்ந்து அறிவுறுத்தி வருவதால், நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த் துறை, வனத் துறை, பொதுப் பணித் துறை, தோட்டக்கலைத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறையினா் தங்கள் அலுவலகம் மற்றும் துறைக்கு உள்பட்ட இடங்களில் வனப் பரப்பளவை உயா்த்திட காலியிடம் எவ்வளவு உள்ளது என்பதனை கண்டறிந்து ஜூன் 10ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முன்னுதாரணமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் , குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com