

உதகையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான மூத்தோா் கூடைப்பந்துப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மதுரை வீரா் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை சிறப்பு மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் மூத்தோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் நீலகிரி, சென்னை, கோவை, மதுரை, திருப்பூா் உள்பட 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. சுமாா் 300 வீரா்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனா். இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உதகை எச்.ஏ.டி.பி. உள்விளையாட்டு அரங்கில் மதுரை, கோவை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மதுரை அணியைச் சோ்ந்த வீரா் நேரு ராஜன் (60) விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென சுருண்டு விழுந்து இறந்தாா். உடனடியாக அவரை உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு அவா் இறந்துவிட்டதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து உதகை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கூடைப்பந்து வீரா் விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சக விளையாட்டு வீரா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.