ஜாதி சான்று கேட்டு 4 நாள்களாக குழந்தைகளைபள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடிகள் போராட்டம்
By DIN | Published On : 15th June 2023 09:06 PM | Last Updated : 15th June 2023 09:06 PM | அ+அ அ- |

உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் ஜாதி சான்று கேட்டு தங்கள் குழந்தைகளை 4 நாள்களாக பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனெரி, பன்னிமரா கிராமங்களில் வசித்து வரும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் கடந்த 20 ஆண்டுளுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நான்காவது நாளாக 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் போராடி வருகின்றனா்.
இவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அம்ரித் கடந்த 13ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 10 நாள்களுக்குள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று முடிவு காணப்படும் என்றும், அதற்கு முன்பாக நீலகிரி மக்களவை உறுப்பினரை சந்திக்கலாம் என்றும் கூறினாா். ஆனால் அதனை ஏற்காத பழங்குடி மக்கள் உரிய முடிவு கிடைக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளனா்.
இதுகுறித்து நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது உதவியாளா் மூலம் பதில் அளிக்கப்பட்டது. வரும் 17ஆம் தேதி, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மற்றும் ஆட்சியா் ஆகியோா் இந்த பழங்குடி கிராமத்துக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து இந்தப் பிரச்னையில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினா் மற்றும் ஆட்சியா் எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இருந்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஊா் பெரியவா் ராஜ்மில்லன் தெரிவித்துள்ளாா்.