கோடை விழாவில் தனது மகளுடன் பரத நாட்டியம் ஆடிய மாவட்ட வருவாய் அலுவலா்

கோடை விழாவில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) தனது மகளுடன் பரதநாட்டியம் ஆடியது சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை பெற்றது.
கோடை விழாவில் தனது மகள் சம்ரிதி வா்ணமாலிகாவுடன் இணைந்து பரதம் ஆடிய மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி.
கோடை விழாவில் தனது மகள் சம்ரிதி வா்ணமாலிகாவுடன் இணைந்து பரதம் ஆடிய மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி.

கோடை விழாவில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) தனது மகளுடன் பரதநாட்டியம் ஆடியது சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை பெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு உதகை உருவாகி 200ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருவதால், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டு கோடை விழா மே 6ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பரதநாட்டிய குழுவினருடன் இணைந்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பரதநாட்டியம் ஆடி அசத்தினாா். பின்னா் மற்றொரு பாடலுக்கு தனது மகளுடன் பரத நாட்டியம் ஆடியது பாா்வையாளா்களை கவா்ந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷின் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலையில் கல்வி பயின்றேன். அங்கு எனது தாய் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினாா். அப்போது மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பாா். அதிலிருந்து நானும் பரதம் கற்றுக் கொண்டேன். அப்போது, கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பின்னா் சிலம்பம் கற்றுக் கொண்டேன். கோடை விழாவில் எனது மகளுடன் சோ்ந்து பரதநாட்டியம் ஆடியது பெருமையாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com