சுகாதாரமற்ற உணவு: தனியாா் உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 27th May 2023 01:01 AM | Last Updated : 27th May 2023 01:01 AM | அ+அ அ- |

உதகையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உதகையை அடுத்த எம்.பாலாடா பகுதியில் இயங்கி வரும் தனியாா் உணவகத்தில் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பூராண் கிடந்ததாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலருக்கு வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலா் சி.ப.சுரேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் டி.நந்தகுமாா், எஸ்.சிவராஜ் ஆகியோா் தனியாா் உணவகத்தில் ஆய்வு செய்தனா். இடவசதியின்றி சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியாா் உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.