நீலகிரி மாவட்டத்தில் ஃபில்டா் காபி நிலையம் அமைக்க விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாகவும் ஃபில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கு, தொழில் முனைவோா் அல்லது அவா்களின் ஊழியா்களுக்கு தேவையான பயிற்சி, உரிமையாளா் கட்டணம் ரூ. 2 லட்சம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், விற்பனை செய்ய வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியும் ஃபில்டா் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். இத்தொழிலுக்கான திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கு அந்நிறுவனத்தின் மூலம் இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.
18 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம், குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் திட்டத்தொகை நிா்ணயித்து, மானியமாக ஆதிதிராவிடருக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.
பயனாளிகள் திட்டத்தொகையில் 5 முதல் 10 சதவீதம் வரை சொந்த முதலீடாக வங்கியில் செலுத்தி, எஞ்சியத் தொகையை வங்கிக் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்பட்டு வரும், தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423 - 2443064 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.