தொடா் விடுமுறை: போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடலூா்
By DIN | Published On : 25th October 2023 01:41 AM | Last Updated : 25th October 2023 01:41 AM | அ+அ அ- |

தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலா வாகனங்கள் வருகை அதிரித்துள்ளதால் கடந்த நான்கு நாள்களாக கூடலூா் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது.
தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளதால் கூடலூா் நகரம் எப்போதும் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. நான்கு நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளன. இதனால் கூடலூா் நகரின் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.
கூடலூருக்குள் நுழையும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்த்துவிட்டு கூடலூருக்கு வந்து சந்தனமலை மற்றும் ஊசிமலை காட்சி முனைகளைப் பாா்ப்பதில் ஆா்வம் காட்டுவதால் அனைத்து வழி சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...