

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரதசக்ரவா்த்தி ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதகை தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு.அருணா, சென்னை உயா்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞா் டி.ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேசியதாவது: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தமிழக அரசு கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வரப்படுகிா என்பதைக் கண்காணித்து முற்றிலும் தடை செய்யவேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலா்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனா்.
பின்னா், உதகை நகராட்சி, தீட்டுக்கல் உரக் கிடங்கைப் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்தனா்.
நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் கௌதம், கள இயக்குநா் வெங்கடேஷ், துணை இயக்குநா் அருண்குமாா், உதவி வனப் பாதுகாவலா் தேவராஜ், மகளிா் திட்ட இயக்குநா் பாலகணேஷ், கோட்டாட்சியா் மகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.