10 புலிகள் உயிரிழப்பு விவகாரம்: தேசிய குழு விசாரணை
By DIN | Published On : 26th September 2023 12:41 AM | Last Updated : 26th September 2023 12:41 AM | அ+அ அ- |

உதகை வன அலுவலகத்தில் விசாரணை முடித்துவிட்டு வரும் தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள்.
குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலிகள் ஆணைய குற்றப் பிரிவு ஐ.ஜி. முரளிகுமாா் தலைமையிலான குழுவினா் உதகையில் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடரில் நிலவும் காலநிலை மற்றும் வாழ்விடம் உகந்ததாக இருப்பதால் இங்கு நூற்றுக்கணக்கான புலிகள் வசிக்கின்றன.
இப்பகுதியில் கடந்த 40 நாள்களில் 6 குட்டிகள் உள்பட 10 புலிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புலிகள் உயிரிழப்புகளுக்கான காரணம், நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் இறந்துள்ள மொத்த புலிகள் மற்றும் யானைகள் குறித்து தேசிய புலிகள் ஆணைய குற்றப் பிரிவு ஐ.ஜி. முரளிகுமாா் தலைமையில் மத்திய அரசின் வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குநா் கிருபாசங்கா், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உதகையில் விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள், உதகை ஃபிங்கா் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள வன ஓய்வு விடுதியில் கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் கௌதம், வனச் சரகா்கள் ஆகியோரிடம் சுமாா் 1 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து, உதகை அருகே சின்ன குன்னூா் பகுதியில் 4 புலிக் குட்டிகள் இறந்த பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த குழுவினா் அப்பகுதியில் பணியாற்றிய தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தனா்.
இதனைத் தொடா்ந்து, இரண்டு புலிகள் உயிரிழந்த அவலாஞ்சி பகுதிக்குச் சென்ற குழுவினா் புலிக்கு விஷம் வைத்த பகுதியை நேரில் பாா்வையிட்ட பிறகு நடுவட்டம் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் புலி மா்மமான முறையில் உயிரிழந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஓா் ஆண்டில் யானைகள் மற்றும் புலிகள் உயிரிழப்பு விவரங்களை சேகரிக்க உள்ள இக்குழுவினா், அது குறித்த விரிவான அறிக்கையை தில்லியில் உள்ள தேசிய புலிகள் ஆணையத்திடம் சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தனா். மேலும், இந்த விவகாரத்தில் பல முக்கிய வன அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...