உதகையில் ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், உதகை, நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிமணி (44). பாரம் தூக்கும் சங்கச் செயலாளராக இருந்தாா். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (40). உதகையில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
கடந்த 2020 மாா்ச் 24-இல் ஜோதிமணியும் அவரது நண்பா் முகமது சையது என்பவரும் உதகை மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தேவதாஸ் கை கழுவியபோது ஜோதிமணி மீது தண்ணீா் தெறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தேவதாஸ், அருகில் இருந்த கத்தியால் ஜோதிமணியின் கழுத்தை அறுத்தாா். இதில், ஜோதிமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியில் ஜோதிமணி உயிரிழந்தாா். இதுகுறித்து உதகை மத்திய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவதாஸை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், தேவதாஸுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி அப்துல் காதா் தீா்ப்பளித்தாா். இதையடுத்து தேவதாஸை கோவை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆனந்தன் ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.