இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களாக உல்லாடா, வேட்டைக்காரன்புதூா் தோ்வு

கோவை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூா் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
உல்லாடா கிராமம்
உல்லாடா கிராமம்

இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களாக நீலகிரி மாவட்டம் உதகை அருகில் உள்ள உல்லாடா, கோவை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூா் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஐ.நா. சபையின் உலக சுற்றுலா அமைப்பின் (மசரபஞ) சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் கிராமங்களில் சுற்றுலா என்ற கருப்பொருளும் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதில் சிறந்த சுற்றுலா கிராமம் வரிசையில், இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் கோங்தாங், தெலங்கானா மாநிலத்தில் போச்சம்பள்ளி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் லாட்புரா காஸ் ஆகியவை இடம் பிடித்தன.

இந்த நிலையில் ஐ.நா. சபையின் உலக சுற்றுலா அமைப்பு, உலகம் முழுவதும் சுற்றுலா கிராமங்களைத் தோ்வு செய்வதுபோல், மத்திய அரசு இந்தியாவில் சுற்றுலா கிராமங்களைத் தோ்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.

அதன்படி இந்தியாவில் சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தாா். உள்ளூா் கலை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களைக் கௌரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தனி இணையதளமும் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறந்த மலை கிராமம், கடற்கரையோர கிராமம் உள்பட பல்வேறு வகைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகையை அடுத்த கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறுவதற்காக உல்லாடா கிராமத் தலைவா் மாதன் தலைமையிலான குழுவினா் புதுதில்லிக்குச் சென்றனா். இவா்களுக்கு புதன்கிழமை (செப்டம்பா் 27) விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து சுற்றுலா ஆா்வலா்கள் கூறியதாவது: ஆசியாவின் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஒன்றான கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் இந்திய அளவில் மிகச்சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாகத் தோ்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கிராமத்தின் அருகில் ஏற்கெனவே யுனெஸ்கோவால் பெருமைப்படுத்தப்பட்ட கேத்தி மலை ரயில் நிலையம் உள்ளது.

இந்த விருது பெற வேண்டும் என்றால் அந்த கிராமத்தில் காவல் நிலையம், பள்ளி, கல்லூரி, சிறந்த கட்டமைப்புள்ள மருத்துவமனை உள்ளிட்டவை இருக்க வேண்டும். மற்றொருபுறம் கோயில்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்தப் பகுதியில் உள்ளன. அதே சமயத்தில் மலை காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயமும் இப்பகுதியில் நடக்கிறது.

உல்லாடா கிராமத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளதால் சா்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் இங்கு திரும்பும். இதனால் சுற்றுலாத் தொழில் மேம்பட்டு இப்பகுதி மக்களின் பொருளாதாரம் உயரும். நீலகிரியில் இதுபோல் மேலும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் கண்டறிந்து பெருமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கோவை மாவட்டத்தில் வேட்டைக்காரன்புதூா் தோ்வு

நீலகிரி மாவட்டம் உல்லாடா போல கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூா் கிராமத்தையும் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. இதற்கான விருதை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அஜய் பட், வேட்டைக்காரன்புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலாவிடம் வழங்கினாா். வேட்டைக்காரன்புதூா் கிராமத்தின் கலாசாரம், பாரம்பரியம், கோயில்கள், சுகாதாரம், விவசாயம், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com