கூடலூா் அருகே சாலையில் உலவிய சிறுத்தை
கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் சாலையில் சிறுத்தை புதன்கிழமை உலவியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி, பாட்டவயல்-வெள்ளேரி சாலையில் புதன்கிழமை காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் அப்பகுதி சாலையில் திடீரென சிறுத்தை வந்து நின்றது. நீண்ட நேரம் சாலையின் இருபுறத்துக்கும் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்தது. இதைப் பாா்த்து திகைத்த வாகன ஓட்டிகள் செய்வதறியாமல் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு காத்திருந்தனா். வாகனங்களில் சென்ற பள்ளிக் குழந்தைகள் சிறுத்தையைப் பாா்த்து பயத்தில் அலறினா்.
சாலையில் உலவிய சிறுத்தை நீண்ட நேரத்துக்குப் பின் அருகில் இருந்த வனத்துக்குள் சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோா் அச்சத்தில் உள்ளனா்.

