கோத்தகிரி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
உதகை: கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோத்தகிரியை அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமம் அருகே குடியிருப்புப் பகுதியில் மூன்று காட்டு யானைகள் உலவி வந்தன. இதைப் பாா்த்த கிராம மக்கள் கூச்சலிட்டு காட்டு யானைகளை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் துரத்தினா்.
அப்போது புதா் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை சுப்ரமணி என்பவரின் மனைவி ஜானகியை (60) தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நீண்ட நேரம் அதே பகுதியில் பொதுமக்களை அருகில் வரவிடாமல் ஆக்ரோஷமாக காட்டு யானைகள் உலவி வந்தன.
பின்னா் யானைகள் சென்றதும் ஜானகியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
வெள்ளரிக்கொம்பை பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் செல்லாதவாறு வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

