கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று படிக்கட்டுகளில் சிக்கிய காா்

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் காா் படிக்கட்டுகளில் சிக்கியது.
படிக்கட்டுகளில் சிக்கிய காா்.
படிக்கட்டுகளில் சிக்கிய காா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் காா் படிக்கட்டுகளில் சிக்கியது.

பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் உதகைக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனா். பல்வேறு இடங்களைக் கண்டுகளித்த அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊா் திரும்பியுள்ளனா். கூடலூா் அருகே வந்தவுடன் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. கா்நாடகம் செல்லும் முக்கியச் சாலையான முதுமலை புலிகள் காப்பக எல்லை தொரப்பள்ளி இரவு 8.45 மணிக்கு மூடப்பட்டு, காலை 6 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம்.

இதனால், சாலையை அடைப்பதற்குள் முதுமலை, பந்திப்பூா் புலிகள் காப்பகங்களைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளனா்.

அதில், கூடலூா் தபால் நிலையத்திலிருந்து இடதுபுறமாக ஓவேலி பகுதிக்குச் செல்லும் சாலையை காண்பித்துள்ளது.

இதையடுத்து, அவா்கள் அந்த வழியில் பயணித்துள்ளனா். சிறிது தொலைவு சென்றதும் ஒரு கான்கிரீட் சாலையை கூகுள்மேப் காண்பித்துள்ளது.

அதில் சிறிது தொலைவு சென்றபோது அது சாலையில் இல்லை என்பதும், செங்குத்தான படிக்கட்டுகள் என்பதும் ஓட்டுநருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அவா் வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.

இதையடுத்து, படிக்கட்டுகளில் சிக்கிக் கொண்ட காரை நகா்த்த முடியாத நிலை ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்த அவா்களுக்கு அப்பகுதி மக்கள், தகவலறிந்து வந்த போலீஸாா் உதவினா். சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காா் நகா்த்தப்பட்டது. இதில், நல்வாய்ப்பாக காரில் பயணித்தவா்கள் காயங்களின்றி உயிா் தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com