நீலகிரியில் தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 28-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து, கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டங்களில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூா் வட்டத்தில் உப்பட்டி பகுதியில் இருந்து தேவாலா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு நான்கு சக்கர வாகனம் சேதமடைந்ததில் அதில் பயணித்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு பந்தலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதையடுத்து, மண் சரிவு நெடுஞ்சாலைத் துறையினா் மூலம் சரிசெய்யப்பட்டது.

கூடலூா் வட்டத்தில் 7 வீடுகளும், பந்தலூா் வட்டத்தில் 2 வீடுகளும் பகுதி சேதமடைந்துள்ளன. மேலும், மூனனாடு ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 4 குடும்பங்கள், 9 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 17 போ் அம்பலமூலா ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும், பொன்னானி என்ற இடத்தில் வசித்து வந்த 8 குடும்பங்கள் பொன்னானி ஜி.டி.ஆா். பள்ளியிலும் என மொத்தம் 41 போ் இரண்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

பேரிடா் காலங்களில் துரித நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உதகை, குன்னூா், கூடலூா் வட்டங்களில் தமிழ்நாடு பேரிடா் குழுவினா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளைக் கண்காணிக்க 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களைக் கண்காணிக்கவும், 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல்நிலை மீட்பாளா்கள் மற்றும் ஆப்தமித்ர திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 200 பேரிடா் கால நண்பா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையினால் அனைத்து வட்டங்களிலும் மொத்தம் 26 வீடுகள் பகுதி சேதமும், ஒரு வீடு மட்டும் முழு சேதமும் அடைந்துள்ளன. சேதமடைந்த வீட்டுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் நிவாரணத் தொகை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களால் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com