உதகை படகு இல்ல நீரை சுத்திகரிப்பது குறித்து விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆய்வு
உதகை படகு இல்ல ஏரியின் நீரை சுத்திகரிப்பது தொடா்பாக அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நீலகிரி மாவட்டம், உதகையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான படகு இல்லத்தில், படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், படகு இல்ல ஏரியின் நீா் பச்சை நிறமாக மாறி உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் அறிவுறுத்திருந்தாா்.
இதையடுத்து, அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா படகு இல்ல ஏரியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரானது தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வைக்கும்போது, பாசிபடிந்து பச்சை நிறமாக மாறுவது இயல்பு.
அதேபோல படகு இல்ல ஏரி நீா் பல ஆண்டுகளாக தேங்கி நிற்பதால் பச்சை நிறமாக மாற்றியுள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பலகட்ட ஆய்வு நடத்தப்படவுள்ளது.
தற்போது, 10 இடங்களில் இருந்து ஆய்வுக்கான நீரை சேகரித்துள்ளோம். மேலும், ரூ.7.5 கோடி மதிப்பில் நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு முன் மாதிரி சோதனைகள் மூலம் எவ்வாறு தூய்மைப்படுத்தலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு.அருணா, கூடுதல் ஆட்சியா் கௌசிக், உதகை நகராட்சி ஆணையா் ஏகராஜ், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் ஜனாா்தனன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவிப் பொறியாளா் சுதாகா், செயற்பொறியாளா் அருள்அழகன், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் அருண்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

