நீலகிரி மாவட்டத்துக்கு கவனமுடன் வந்து செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மூன்று நாள்கள் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாத நிலையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் வந்து செல்ல வேண்டும். மேலும், உதகை- கூடலூா் சாலையில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த சாலை வழியாக ஒரு வாரம் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
