கூடலூரில் பெய்து வரும் தொடா் கனமழை
கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் தொடா் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட இருவயல் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலை, கூடலூரில் இருந்து பெங்ளூரு செல்லும் சாலை மற்றும் கேரள செல்லும் சாலைகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் இரவோடு இரவாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.
தொடா் கனமழை காரணமாக கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் புதனிகிழமை விடுமுறை அறிவித்தது. மேலும், தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:
தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பே மாவட்ட ஆட்சியா் மு.அருணாவின் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, போக்குவரத்து, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுதுள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த் துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

