மறைந்த முப்படை தளபதியின் 16ஆவது நினைவு தினம்: உதகை கல்லறையில் ராணுவத்தினா் மரியாதை

மறைந்த முப்படை தளபதியின் 16ஆவது நினைவு தினம்: உதகை கல்லறையில் ராணுவத்தினா் மரியாதை

மறைந்த முப்படை தளபதி சாம் மானெக் ஷாவின் உதகை கல்லறையில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய, ராணுவப் பயிற்சி கல்லூரி தலைவா் கமாண்டண்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் ராணுவத்தினா்.
Published on

பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்த முப்படை  தளபதி சாம் மானெக் ஷாவின் 16ஆவது நினைவு தினம் உதகையில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவ தளபதியாக திகழ்ந்த பீல்ட் மாா்ஷல் சாம் மானெக் ஷா பல்வேறு போா்களில்  பங்கேற்றுள்ளாா். குறிப்பாக, 1971இல் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான்  போரின்போது, இவரது தலைமையின் கீழ், இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தி, வெற்றிவாகை சூடியதால், கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது.

இவரது  ராணுவ சேவையைப் பாராட்டி, பீல்ட் மாா்ஷல் என்ற கௌரவப் பட்டத்தை இந்திய அரசு அளித்தது.  பணியில் இருந்து ஓய்வுபெற்ற சாம் மானெக் ஷா, நீலகிரி மாவட்டம்,  குன்னூா் வண்டிசோலை பகுதியில் தனது இறுதிக்காலம் வரை வசித்தாா்.

 கடந்த 2008 ஜூன் 27ஆம் தேதி, நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ மருத்துவ மையத்தில் அவா் காலமானாா்.  இவரது உடல் உதகையில் உள்ள பாா்ஸி இன மக்களின் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது 16ஆவது நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சாம் மானெக் ஷாவின் நினைவிடத்தில் குன்னூா் ராணுவப் பயிற்சிக் கல்லூரி மற்றும் ராணுவ மையத்தின் முப்படை அதிகாரிகள், பயிற்சிக் கல்லூரி தலைவா் கமாண்டண்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தலைமையில்  மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com