சாக்கடை கால்வாய் அடைப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு: உதகை நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்
உதகையில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே கழிவு நீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீா் சாலையில் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக நகரமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
உதகை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ரவிகுமாா், நகராட்சி ஆணையா் ஏகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் பேசியதாவது:
உதகைக்கு ஆண்டுக்கு சுமாா் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். மழைக் காலங்களில் உதகை நகரில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவு நீா் கால்வாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவு நீா் செல்லும் அவலம் தொடா்கிறது. இதனால் கடும் துா்நாற்றம் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கும், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
உதகையின் நகரப் பகுதிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லாவிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்படும். இதனால் கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் அடைப்புகளை நீக்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் தூய்மை குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தால் ஊழியா்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்றனா்.
இதே கருத்தை வலியுறுத்தி அனைத்து வாா்டு உறுப்பினா்களும் பேசினா்.
இதையடுத்து நகராட்சி ஆணையா் ஏகராஜ் பேசுகையில், உதகை நகராட்சியில் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றாா். இதற்கு, நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் கூறினா்.
