புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம்: நீலகிரியில் 7,706 போ் பயன் - மாவட்ட ஆட்சியா்
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின்கீழ் 7,706 போ் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கவும், உயா் கல்வியில் மாணவ, மாணவிகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உயா் கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டமும், மாணவா்களும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2022 ஆம் நிதியாண்டு முதல் 2025-26 வரை மொத்தம் 7,706 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
