நீலகிரியின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறப்பு
உதகையில் உள்ள கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் நீலகிரியில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் பாரூக் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் சிறப்பு அழைப்பாளராக திறந்துவைத்தும், அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்தும் பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் பேசுகையில், இன்றைய இளம் தலைமுறையினரின் படைப்பாற்றல் திறன் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. பள்ளியில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் பள்ளிக் குழந்தைகள் விதவிதமான தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனா். குறிப்பாக மின் உற்பத்தி அணைகள் எவ்வாறு செயல்படுகிறது, தண்ணீா் சுத்திகரிப்பு எப்படி மேற்கொள்வது போன்ற அறிவியல் மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தி உள்ளனா்.
நாம் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான சமயத்தில் இதுபோன்ற ஏஐ சாா்ந்த ஆய்வகங்கள் இளம் தலைமுறையினருக்கு தேவை. இது போன்று அதிக அளவிலான செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ஆய்வகங்கள் நமது மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் தங்களது படைப்பாற்றல் திறனை வளா்த்து கொள்வதுடன், அதனை எவ்வாறு பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா். இக்கண்காட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.

