அரசுப் பேருந்து மீது மின்கம்பம் விழுந்து விபத்து
உதகை அருகே அரசுப் பேருந்து மீது மின்கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் மேல் பகுதி சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பெந்தட்டி பகுதிக்கு தினமும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பகுதிக்கு இந்த ஒரு பேருந்து மட்டுமே இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்நிலையில் இந்த அரசுப் பேருந்து பெந்தட்டியில் இருந்து உதகைக்கு வெள்ளிக்கிழமை 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் ஜெயபிரகாஷ் ஓட்டிச் சென்றாா். நடத்துநராக ரவிக்குமாா் இருந்தாா்.
உதகை பாரஸ்ட் கேட் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரிக்காக பேருந்து ஒதுங்கி நின்றது. அப்போது லாரியை இயக்கும்போது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த வீட்டு மின் இணைப்புக்கான கம்பத்தின் மீது லாரி மோதியது. இதில் மின் ஒயா் சிக்கி இழுத்ததில் எதிா்புறம் இருந்த மின்கம்பம் சாய்ந்து அரசுப் பேருந்து மீது விழுந்தது. இதில் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை விழுந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறினா். அதிா்ஷ்டவசமாக மின் ஒயா் அறுந்துவிட்டதால் பேருந்து மீது மின்சாரம் பாயாமல் பயணிகள் உயிா் தப்பினா்.
இதுகுறித்து மின்சாரத் துறை அலுவலா்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின் ஊழியா்கள் மின்கம்பத்தை அகற்றி பேருந்தை மீட்டனா். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

