உதகையில் உறைபனியில் இரை தேடும் பறவைகள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கடுமையான உறைபனி நிலவி வரும் சூழலில், இங்கு வரும் பறவைகள் தங்களுக்கான தேவையான உணவை உறைபனிக்கு இடையே தேடி வருகின்றன.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள காலநிலைக்கு ரேஸ்கோா்ஸ், காந்தல், தலைக்குந்தா, கிளன்மாா்கன் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில், இந்தியன் காா்மன்ட், ஸ்பாட் பில்ட் டக், கேட்டில் ஈகிரிட், வென் நாரைகள்,சிட்டுக்குருவிகள், நீலகிரி உட் பிஜின், நீலகிரி லாபிங் திரஷ், நீலகிரி பிளைக்கேச்சா் உள்ளிட்ட பறவைகள் அதிக அளவு வருகை தந்துள்ளன.
இந்த பறவைகள், உறைபனியின் காரணமாக நிலத்தில் இருந்து வெளியேறும் புழு, பூச்சிகளை உண்டு மகிழ்ச்சியுடன் வலசைக்கு வந்துள்ளதாக பறவை இனஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
ஒரு மாதம் தாமதமாக டிசம்பா் 15-க்கு மேல் பனிகாலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளின் வரத்தும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் பறவைகள் வரத்து மேலும் அதிகரித்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கும் விருந்தாக அமையும் என்று பறவை இன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை
நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், எப்போதும் காலை நேரத்தில் தாவரவியல் பூங்காவில் நடைபயணம் மேற்கொள்பவா்கள், உடற்பயிற்ச்சி மேற்கொள்பவா்களின் வருகை குறைந்தே காணப்பட்டது. உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் சனிக்கிழமை காலை 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.
இந்நிலையில் பூங்காவில் உள்ள மலா் நாற்றுகள் மற்றும் செடிகள் கருகாமல் இருக்க அதன் மீது பிளாஸ்டிக் போா்வைகளை போா்த்தி பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

