நுந்தளா கிராமத்தில் யானை நடமாட்டம்
உதகை அருகே நுந்தளா கிராமத்துக்குள் முதல்முறையாக நுழைந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே நுந்தளா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமாா் 400 குடியிருப்புகள் உள்ள நிலையில் காட்டு யானை ஒன்று கிராமப் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடமாடியது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா் .
இந்த யானை கெத்தை வனப் பகுதியில் இருந்து சுமாா் 50 கிலோ மீட்டா் பயணம் மேற்கொண்டு நுந்தளா கிராமத்துக்குள் நுழைந்துள்ளது. அப்பகுதியில் அதிக அளவு குடியிருப்புகள் உள்ளதால் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
