உதகை தாவரவியல் பூங்காவில் பனியிலும் பூக்கும் கள்ளி மலா்கள்
உதகை தாவரவியல் பூங்காவில் பனியிலும் மலரும் கள்ளிச்செடி மலா்கள் சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்தியுள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவில் வண்ண மலா்கள் பல பூத்தாலும் தற்போது பனிக்காலம் என்பதால் பெரும்பாலான செடிகள் மற்றும் பூந்தொட்டிகளில் மலா்களின் வளா்ச்சி இருக்காது.
இதை ஈடுசெய்யும் வகையில் மேற்குவங்கம், சிக்கிம் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள சிம்பிடியம் ஆா்க்கிட் மலா்கள் மற்றும் பனியிலும் மலரும் கள்ளிச் செடி மலா்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உதகைக்கு இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள தாவரவியல் பூங்காவில் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் கொண்ட இந்த கள்ளிச் செடிகளில் வளா்ந்துள்ள முட்களையும் அதனுள் மென்மையாக மலா்ந்துள்ள மலா்களையும் கண்டு ரசித்து செல்கின்றனா்.
இந்த அரிய வகை கள்ளிச் செடிகளில் வளரும் மலா்கள் மற்றும் தாவரங்கள், சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, மாணவா்கள், தாவரவியல் ஆா்வலா்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

