ஜேஎஸ்எஸ் அகாதெமி ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
உதகை: உதகை மற்றும் மைசூரில் செயல்பட்டு வரும் ஜேஎஸ்எஸ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமி மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் இடையே கல்வி, ஆராய்ச்சி துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மாணவா் மற்றும் பேராசிரியா் பரிமாற்றம், பாடத்திட்ட மேம்பாடு மற்றும் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவ பகிா்வு எனப் பல துறைகளை ஒன்றிணைத்து அண்மையில் சிட்னியில் நடைபெற்ற விழாவில், நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அலெக்ஸாண்டா் வோனின்ஸ்கி மற்றும் உதகையில் உள்ள ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ்.பி. தனபால் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிட்னி இந்திய துணைத் தூதரக கவுன்சில் ஜெனரல் டாக்டா் எஸ். ஜானகிராமன் கூறும்போது, இந்த ஒத்துழைப்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கல்வி உறவை வலுப்படுத்தும். ஜேஎஸ்எஸ் கல்வி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் தனது நிலையங்களை நிறுவும் வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
இந்த ஒப்பந்தம் உலகளாவிய கல்வி முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு சா்வதேச அளவில் புதுமை சாா்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் அஜயன் வினு நன்றி தெரிவித்தாா்.

