உதகையில் நாய்களுக்கு பூங்கா அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
உதகை மரவியல் பூங்காவில் ரூ. 40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கு பூங்கா அமைக்க நடைபெற்று வரும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரி மாவட்டம், உதகை மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா அமைக்கப்படவுள்ளது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலா் நாய்களை அழைத்து வரும் போது, அதை பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாமல் தனியாக அவா்கள் தங்கும் அறையிலேயே விட்டு செல்கின்றனா்.
இதை தவிா்ப்பதற்காகவும், நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வதற்காகவும் உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்கான சிறப்பு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள், புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கபாதை, காய்ந்த இறகு மூலம் செய்யப்பட்ட குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பூங்கா அமைக்கும் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு பூங்கா அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, உதகை அரசு கல்லூரி அருகில் உள்ள இளைஞா் விடுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரமேஷ்,
தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சூா்யபிரகாஷ், உதகை வட்டாட்சியா் சங்கா்கணேஷ் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

