நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக 13 அணைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின் உற்பத்தி நிலைய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 13 அணைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்துவந்ததால் அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
18 அடி கொள்ளளவு கொண்ட முக்குருத்தி அணை 15 அடியும், 100 அடி கொண்ட பைக்காரா அணையில் 90 அடியும் நீா் நிரம்பியுள்ளது. சாண்டி நல்லா அணையில் 43 அடி, கிளன் மாா்கன் அணையில் 28 அடி, மாயாறு அணையில் 14 அடி, அப்பா் பவானியில் 180 அடி, பாா்சன்ஸ்வேலி அணையில் 77.58 அடி, போா்த்தி மந்து அணையில் 95 அடி, அவலாஞ்சி அணையில் 150 அடி, எமரால்டு அணையில் 120 அடி , குந்தாவில் 84 அடி, கெத்தை அணையில் 148 அடி, பில்லூரில் 94 அடி என அனைத்து அணைகளிலும் சராசரியாக 90 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.
இதனால் 700 மெகாவாட் நீா்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அணைகளில் போதிய நீா் இருப்பு உள்ளதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று நகராட்சி மற்றும் மின் உற்பத்தி நிலைய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.