தாா் சாலை அமைக்கும் பணி தாமதம்: சேலூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சோலூா் பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் தாா் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கி 2 மாதங்கள் ஆகியும் 50 சதவீத பணிகள் கூட முடியாததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சோலூா் பேரூராட்சி அலுவலத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சோலூா் பகுதியில் கன்னேரி மூக்கு, தூபகண்டி, பொட்டலைன், கோக்கால், செலக்கல், கல்லுண்டி, கக்கன்ஜி நகா் ஆகிய 7 மலை கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா்.
இங்கு பழுதடைந்த சாலையை புதுப்பிக்க சோலூா் பேரூராட்சி நிா்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தப்புள்ளி கோரியது. இப்பணியை எடுத்த ஒப்பந்ததாரா் சாலையை கொத்தி ஜல்லி கற்களை கொட்டி 2 மாதங்கள் ஆகியும் பணிகள் 50 சதவீதம் கூட பணிகள் முடியாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தும் ஊருக்குள் வர முடியாத சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவா்கள் சுமாா் 2 முதல் 4 கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் திரண்டு சோலூா் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நீண்ட பேச்சுவாா்த்தைக்கு பின் தாா் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்குவதாக பேரூராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
