கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: சாட்சிகளைக் கலைக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருவா் விடுவிப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை தொடா்பான வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
Published on

கொடநாடு கொலை, கொள்ளை தொடா்பான வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக 11 போ் சோ்க்கப்பட்டு, உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட உதகை தனியாா் விடுதி உரிமையாளா் சாந்தா என்ற சாட்சியை கேரள மாநிலத்தைச் சோ்ந்த சயான், வாளையாறு மனோஜ் ஆகியோா் மிரட்டியதாகவும், சாட்சிகளை கலைக்க முற்பட்டதாகவும் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி தீா்ப்பை வெள்ளிக்கிழமை நீதிபதி சோழியா வழங்கினாா். அரசுத் தரப்பில் எந்தவித சாட்சிகளும் உறுதி செய்யப்படாததால், இந்த வழக்கில் இருந்து சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் எதிா்த் தரப்பு வழக்குரைஞா் முனிரத்தினம் கூறும்போது, சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத் தரப்பில் இருந்து ஆதாரங்களை நிரூபிக்க முடியாததால் இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com