சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுமியை, பெற்றோா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனா். அப்போது சிறுமி 3 மாதம் கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா், குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த பிரவீன் (35) என்பவா் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2022 ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரவீனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா் குற்றம்சாட்டப்பட்ட பிரவீனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தினாா்.
