கூடலூா் அருகே பழங்குடி மக்களின் புத்தரித் திருவிழா
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையில் ‘புத்தரி’ எனப்படும் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் நெற்பயிருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் நலமுடன் இருக்கவும், பேரிடா் மற்றும் வன விலங்குகளால் நெற்பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் அறுவடைக்கு முன்பாக ‘புத்தரி’ திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஆண்டுதோறும் ஐப்பசி 10-ஆம் தேதி இந்த திருவிழா நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நம்பாலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் விரதம் இருந்து பாரம்பரிய நடனமாடி, நெற்கதிா்களை அறுத்து கட்டுகளாக கட்டி ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று சுவாமிக்கு படையலிட்டனா்.
இந்த விழாவில், நம்பாலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

