கூடலூரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்: திமுக, கூட்டணிக் கட்சியினா் வெளிநடப்பு

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனா்.

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி தொடங்கப்படும் என தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கான பணி நவம்பா் 4-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடன் வாக்காளா் பதிவு அலுவலா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூடலூா் கோட்டாட்சியா் குணசேகா் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை’ எனக் கூறி கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினா். இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com