ஸ்ட்ராபொ்ரி சாகுபடியில் கூடுதல் வருமானம் பெறலாம் தோட்டக் கலை துறை தகவல்

Published on

ஸ்ட்ராபொ்ரி சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறலாம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் நீலகிரி மாவட்டத்தின் தனித்துவ திட்டமாக அங்கக வேளாண்மை திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் மலைக் காய்கறிகளுடன், மலா் சாகுபடி, ஸ்ட்ராபொ்ரி சாகுபடி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். பலகாலமாக ஒரே விதமான காய்கறிகள் சாகுபடி செய்வதால் மண்வளம் சேதம் அடைந்து, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கம் அதிக அளவில் தென்படுகிறது.

இந்நிலையில் மாற்று பயிராக ஸ்ட்ராபொ்ரி சாகுபடி செய்யுமாறு விவசாயிகளிடம் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஸ்ட்ராபொ்ரி பயிரானது நடவு செய்யப்பட்டது முதல் 3 மாதங்களில் அறுவடைக்கு வரும். ஸ்ட்ராபொ்ரி பழங்களில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபொ்ரி விவசாயம் லாபகரமானதாகவும், மலைக் காய்கறிகளுக்கு மாற்றாகவும், உள்ளுா் சந்தைகளில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் 181 ஏக்கா் பரப்பளவில் ஸ்ட்ராபொ்ரி சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனா். எனவே, ஆா்வம் உள்ள விவசாயிகள் மலைக் காய்கறிகளுக்கு பதிலாக ஸ்ட்ராபொ்ரி சாகுபடி செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com