பனியின் தாக்கம்: கருகி வரும் தேயிலைச் செடிகள்
நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கத்தின் காரணமாக தேயிலைச் செடிகள் கருகியுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக குன்னூா், குந்தா, தாய்சோலை, கோரகுந்தா, அப்பா்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் தொடா்ந்து காணப்படுவதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள தேயிலைச் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன.
மலைச்சரிவுகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் நீா்பனியின் தாக்கம் வரும் பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பனியின் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைச் செடிகள் கருகியுள்ளன. இதன் காரணமாக சிறு தேயிலை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.

