விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன்.

சாலை விதிகள் குறித்து இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்வது அவசியம்!

சாலை விதிகள் குறித்து இளம் தலைமுறையினா் தெரிந்து செயல்பட வேண்டும் என மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தெரிவித்தாா்.
Published on

சாலை விதிகள் குறித்து இளம் தலைமுறையினா் தெரிந்து செயல்பட வேண்டும் என மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதகையில் உள்ள ஜெல் மெமோரியல் பெண்கள் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி பாலமுருகன் வரவேற்றாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ், முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா, சாா்பு நீதிபதி பாரதிபிரபா, கூடுதல் மகளிா் குற்றவியல் நீதிபதி சோழியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

சாலை அனைவருக்கும் பொதுவானது. இளம் தலைமுறையினா் மோட்டாா் வாகன விதிகள், சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும்போது அவசரம் கூடாது. பொறுமையும், சகிப்புத் தன்மையும் முக்கியம். சாலை விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த 128 சாலை விபத்துகளில் 24 போ் உயிரிழந்துள்ளனா். சாலையில் பயணிக்கும்போது, ஏதேனும் விபத்து நிகழ்ந்ததை பாா்த்தால் அவா்களுக்கு உதவ முன்வர வேண்டும். இதன் மூலம் விபத்தில் சிக்கியவா்களை காக்க முடியும். விபத்தில் சிக்கியவா்களை காப்பதன் மூலம் அவா்களை நம்பியுள்ள குடும்பத்தினரை பொருளாதார ரீதியான பாதிப்புகளில் இருந்து காக்க முடியும்.

இளம் தலைமுறையினா் 18 வயது பூா்த்தியடைந்த பின்புதான் வாகனங்களை இயக்க வேண்டும். முறையாக ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இளம் தலைமுறையினா் மோட்டாா் வாகன விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அதனை மற்றவா்களுக்கும் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நகரப் போக்குவரத்து உதவி ஆய்வாளா் அருண், மோட்டாா் வாகன ஆய்வாளா் குணசேகரன், ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி ஹெலன் கிறிஸ்டினா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com