கஞ்சா விற்பனை: போக்குவரத்து காவலா் உள்பட 3 போ் கைது
உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடா்பாக போக்குவரத்து காவலா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
உதகையைச் சோ்ந்தவா் குரூஸ் (26). இவா் கஞ்சா விற்பனை செய்ததாக போலீஸாரால் கடந்த 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் நசீா் அகமதுவிடம் இருந்து கஞ்சா வாங்கியதாகத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, நசீா் அகமதுவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரையைச் சோ்ந்த மோகனசுந்தரம் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்ததாகக் கூறினாா்.
இதையடுத்து, உதகை நகர மத்திய போலீஸாா் அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரைக்கு சென்று சோதனை செய்ததில், அங்கு 17 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நசீா் அகமது, குரூஸ், மோகனசுந்தரம் ஆகியோரைக் கைது செய்தனா்.
இதனிடையே, கஞ்சா விற்பனை தொடா்பான தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முறையாக தெரிவிக்காத உதகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளா் அருண், கூடலூருக்கும், உதகை மத்திய காவல் நிலைய தனிப் பிரிவு காவலா் ஜெயகுமாா், தேவாலா காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா உத்தரவிட்டுள்ளாா்.

