மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை குடும்ப நல நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த ஆருக்குச்சி கீழ்ஒசட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்-ஆலமதி தம்பதியின் மகன் ராஜேந்திரன் (60). இவருக்கு திருமணம் ஆகி குடும்பத்தைப் பிரிந்துவிட்டதால் தாயுடன் வசித்து வந்தாா்.
ராஜேந்திரன் அவ்வப்போது ஓட்டுநா் வேலைக்கு சென்று வந்தாா். ராமகிருஷ்ணன் அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை பாா்த்து ஓய்வுபெற்றதால் அவருடைய ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் ஆலமதிக்கு கிடைத்தது. இந்தப் பணத்தைக் கேட்டு ராஜேந்திரன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள தனது மகள் பத்மாவதி வீட்டுக்கு கடந்த 2024 ஜனவரி 12-ஆம் தேதி சென்றுவிட்டு கீழ்ஒசட்டி வீட்டுக்கு வந்த ஆலமதியிடம் ராஜேந்திரன் பணம் கேட்டுள்ளாா். அதற்கு ஆலமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அருகில் இருந்த கட்டையால் தாய் ஆலமதியைத் தாக்கியுள்ளாா்.
இதில் படுகாயமடைந்த அவா் மீட்கப்பட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலமதி அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொலக்கம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா். உதகையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதில், மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொலை செய்த ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆனந்த், முகமது ஆகியோா் ஆஜராகினா்.

