கோப்புப் படம்
கோப்புப் படம்

பணியின்போது மாரடைப்பால் எஸ்எஸ்ஐ மரணம்! அதிா்ச்சியில் தாய் உயிரிழப்பு!

Published on

உதகை அருகில் உள்ள தேனாடுகம்பை காவல் நிலைய எஸ்எஸ்ஐ (சிறப்பு உதவி ஆய்வாளா்) மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த தகவலைக் கேட்ட அதிா்ச்சியில் அவரது தாயாரும் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பில்லிகம்பை பகுதியைச் சோ்ந்தவா் தன்ராஜ் (56). இவா், உதகை அருகே உள்ள தேனாடுகம்பை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி லதா, இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் தன்ராஜ் ஒரு வழக்கு சம்பந்தமாக உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு பணிகளை முடித்துவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்துள்ளாா்.

அப்போது அவருக்கு திடீரென மயக்கம் மற்றும் படபடப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதனையில், தன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த தகவல் கேட்டு மிகவும் அதிா்ச்சியில் இருந்த தன்ராஜின் தாயாா் மிச்சியம்மாள் (78) சனிக்கிழமை உயிரிழந்தாா். அடுத்தடுத்த நாள்களில் மகனும், தாயும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

Dinamani
www.dinamani.com