ஜன.31-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதகையில் இலவச மருத்துவ முகாம்
நீலகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோவையைச் சோ்ந்த செஷயா் ஹோம்ஸ் அமைப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக செஷயா் ஹோம்ஸ் அமைப்பின் தலைவா் தனலட்சுமி கோவிந்தராஜன் கூறும்போது, உதகையில் உள்ள ஒக்கலிக சங்க திருமண மண்டபத்தில் இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைக்கிறாா். இதில் ஒரு மாற்றுத்திறனுள்ள ஒரு வயது குழந்தை முதல் 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மட்டும் நரம்பியல் துறை, எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கண் நலம் மற்றும் கண் அறுவை சிகிச்சை, பிறவியிலேயே கை, கால், முதுகு பகுதி எலும்பு வளைந்து காணப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மேல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றாா்.

