பழங்குடியின, இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு நிரந்தர சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் அனைத்து சமுதாய இளைஞர் இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பொங்கலூர் இரா.மணிகண்டன் வெள்ளிக்கிழமை மனு அளித்தார் .
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக, கேரள மலைப்பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டு, கோடாங்கிகளாக, வேட்டையாடுபவர்களாக, குறி சொல்லிப் பிழைப்பவர்களாக உள்ள மிகச் சிறிய சமுதாயம் காட்டு நாயக்கர் சமுதாயமாகும்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் தளிஞ்சி, உடுமலை, வால்பாறை, டாப்சிலிப் போன்ற பல பகுதிகளில் இருந்து, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குறி சொல்லும் கோடாங்கிகளாக வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம், நெருப்பெரிச்சல், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கு மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர்.
அரசு ஆணைப்படி பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாயத்தினர், தற்போது சமதாயத்தில் தாங்களும் உயர, தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால், இச்சமுதாயத்தினர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், வேலைவாய்ப்புப் பெறவும் சாதிச் சான்று தேவைப்படுகிறது.
இவர்களுக்கு சாதிச் சான்றில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள இந்து காட்டுநாயக்கர் என்ற சாதிப் பெயருடன் சான்று வழங்கினால் மட்டுமே அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.
சமீபகாலங்களில் 2003-இல் திருப்பூர் வட்டாட்சியர் இந்து காட்டு நாயக்கர் என்று சான்று வழங்கி பழங்குடியினருக்கான பட்டியலில் உறுதி செய்து சான்றளித்துள்ளார். அதன் பிறகு கடந்த பத்தாண்டுகளில் வந்த 4 வட்டாட்சியர்கள், தொடர்ந்து காட்டுநாயக்கர் என்று சாதிச் சான்று தர மறுத்து, பல்வேறு பெயர்களில் சாதிச் சான்று வழங்கியுள்ளார்கள்.
இதனால் பழங்குடி சமுதாயமான இந்து காட்டு நாயக்கர் சமுதாயம் தனக்கான எந்தச் சலுகையையும் பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாட்சியர் மாறும்போதும் புதிது புதிதாக விதிகளைச் சொல்லி அச்சமுதாய மக்களை அலைக்கழிக்கிறார்கள்.
இதுகுறித்த 29.4.2013 தேதியிட்ட தமிழக அரசு செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிய அரசாணை ஒன்றில், பழங்குடியினருக்கு சரியான சான்று வழங்குமாறு தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். அப்படியிருந்தும் தொடர்ந்து சாதிச் சான்று பெறமுடியாமல் இவர்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு மட்டுமே 66 மாணவர்கள் கல்லூரியில் சேர சாதிச் சான்று இல்லாமல் தவிக்கிறார்கள். இது குறைந்த எண்ணிக்கையிலுள்ள இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டு, இந்த மக்களுக்கான நிரந்தர சாதிச் சான்று வழங்கி, இந்தச் சமுதாய மக்களும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். உடன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் பழனி சிவகுமார், அனைத்து சமுதாய மாணவர் இயக்க மாநில அமைப்பாளர் என்.ராம் பிரபு ஆகியோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.