மத நல்லிணக்கத்துடன் திகழும் அலங்கியம் கிராமம்: கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தாராபுரம் அருகே அலங்கியத்தில் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து மாரியம்மன் கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தாராபுரம் அருகே அலங்கியத்தில் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து மாரியம்மன் கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
 திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலிருந்து பழனி செல்லும் வழியில் அமைந்துள்ளது அலங்கியம் கிராமம். இங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. அலங்கியம், சுற்றுவட்டாரக் கிராமங்களான வெள்ளைகவுண்டன்வலசு, பெருச்சிபாளையம், நால்ரோடு, கல்துறை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அலங்கியம் மாரியம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
 இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். பண்டிகை தொடங்கியதும் ஊர்ப் பெரியவர்கள் சேர்ந்து இளைஞர்கள் அடங்கிய 4 குழுவை ஏற்படுத்துவர். இந்தக் குழுவில் அனைத்து மதத்தினரும் இடம் பெறுவது வழக்கம். அவர்கள், அந்தந்தப் பகுதியில் வாழை, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது உள்பட திருவிழாவுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வர்.
தவிர, அந்தந்தப் பகுதிகளில் அனைத்து வயதினருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவர்.
திருவிழா அன்று இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முஸ்லிம் தெரு, தெற்கு தெரு பகுதிகளில் முஸ்லிம் இளைஞர் சங்கம் சார்பில் சுவாமிக்கு அனைத்துப் பூஜைகளும் செய்து, பெரியவர்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, அனைத்துப் பகுதிகளையும்போல இஸ்லாமியர் தெருவிலும் அனைத்து வீடுகளும் சுண்ணாம்பு பூசப்பட்டு, சுத்தம் செய்யப்படும். மேலும், ஊர்வலத்தில் வருபவர்களுக்கு பழம், தேங்காய், குளிர்பானங்களையும்  இஸ்லாமியர்கள் அளிக்கின்றனர்.
 இதுதவிர பல வீடுகளில் விருந்தும் அளிக்கப்படும். இதனை மனமுவந்து இந்துக்களும் ஏற்றுக்கொள்வர். பல ஆண்டுகாலமாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அலங்கியம் கிராம மக்கள் கூறியதாவது:
மாரியம்மன் கோயில் திருவிழாவை அனைத்து மதத்தினரும் இணைந்தே நடத்தி வருகிறோம். திருவிழாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இதுவரை காவல் துறையினரைக் கேட்டதில்லை. திருவிழாவுக்காக உதகை, பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களில் வசிக்கும் அலங்கியத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்துவிடுவர். பல ஆண்டுகளாக கோயில் திருவிழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் அனைவரும் இணைந்து மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com