பன்முகத்தன்மையை சிதைக்கிறது மத்திய அரசு: சிஐடியூ குற்றச்சாட்டு

ஒற்றை மொழி, ஒரே கலாசாரம் என்ற திட்டத்தை வகுத்து நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும்
Updated on
1 min read

ஒற்றை மொழி, ஒரே கலாசாரம் என்ற திட்டத்தை வகுத்து நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளதாக சிஐடியூவின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றஞ்சாட்டிள்ளார்.
கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் 8-ஆவது ஆண்டு மாநில மாநாடு திருப்பூரில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.சுப்பையா தலைமை வகித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் கொடியை சி.சுப்பையாவும், சிஐடியூ கொடியை மாவட்ட துணைத் தலைவர் பி.முத்துசாமியும் ஏற்றினர்.
மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.காமராஜ் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
சிஐடியூவின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்  ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடக்கி வைத்து மேலும் பேசியதாவது:
ஒற்றை மொழி, ஒரே கலாசாரம் என்ற அடிப்படை நோக்கத்தோடு நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சியில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஒரே தேசம், ஒரே சட்டம் என்ற அவர்களது திட்டத்துக்கு வலுசேர்க்கவே நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் பணியை ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் செய்து வருகின்றன.
தேர்தலின்போது, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் மோடி, தற்போது மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியவுடன், அதை திசை திருப்ப புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது, பணத்தை செல்லாததாக்குவது, வங்கியில் பணம் செலுத்த, எடுக்க கட்டணம் வசூலிப்பது என பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனம் உள்ளதால், தமிழக அமைச்சர்களுக்கு மக்கள் பிரச்னையைப் பற்றி கவலையே இல்லை என்றார்.
மாநாட்டில், சிஐடியூவின் மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன், கேரள மாநில கட்டுமானத் தொழிற்சங்கச் செயலாளரும், நலவாரியத் தலைவருமான கே.வி.ஜோஸ், தெலங்கானா மாநிலச் செயலாளர் கோத்தம் ராஜு, கர்நாடக மாநிலச் செயலாளர் வீராசாமி, சிஐடியூ மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com