தண்ணீரே வராத ஆழ்துளைக் கிணற்றுக்கு ரூ. 4 லட்சம் செலவு: மணக்கடவு பொதுமக்கள் புகார்

தாராபுரம் அருகே தோண்டப்பட்டு தண்ணீரே வராத ஆழ்துளைக் கிணற்றில் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகித்ததாகவும், அதற்கென

தாராபுரம் அருகே தோண்டப்பட்டு தண்ணீரே வராத ஆழ்துளைக் கிணற்றில் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகித்ததாகவும், அதற்கென ரூ. 4 லட்சம் செலவழித்ததாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக, மணக்கடவு கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - அலங்கியம் சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உபகோட்ட அலுவலகம்.  இங்கிருந்து தாராபுரம், வெள்ளகோவில் நகராட்சிப் பகுதிகளுக்கும், மூலனூர், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் காவிரி, மணக்கடவு, நஞ்சியம்பாளையம், சுண்ணாம்புகாடு உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதன்மூலம் கவுண்டச்சிபுதூர், பொன்னிவாடி, மணக்கடவு, பெரமியம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில், குடிநீர் உபகோட்ட அலுவலகம் சார்பில் நடைபெற்ற பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரிகள் ஊழியர்களை இடமாற்றம் செய்தனர். அதன்பின் தற்போது மீண்டும் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து மணக்கடவு கிராம மக்கள் சார்பில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர், தலைமை பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு: 
மணக்கடவு ஊராட்சியில்  500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கும் பொம்மநல்லூர் ஊராட்சிப் பகுதியிலும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து காட்டம்பட்டி பிரிவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. பல நூறு அடி ஆழம் தோண்டப்பட்டும் தண்ணீர் வரவில்லை.
தற்போது பயனற்ற நிலையில் உள்ள இந்த ஆள்துளைக் கிணற்றில் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகிக்க ரூ. 4 லட்சம் செலவிட்டதாக அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். 
இதுகுறித்து தகவல் உரிமை அறியும் சட்டத்தில் பதில் பெறப்பட்டுள்ளது. மேலும், தொகை ஒதுக்கீடு பெறப்பட்டதற்கான ரசீதும் வைத்துள்ளோம். எனவே, அதிகாரிகள் இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள  பெரமியம் தரைமட்டத் தண்ணீர்த் தொட்டி மற்றும் மோட்டார்களை பழுதுபார்த்ததாக மோசடி நடைபெற்றுள்ளதாகவும் பெரமியம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் மணிமேகலை கூறியதாவது: வறட்சியைச் சமாளிக்க காட்டம்பட்டி பிரிவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. எனினும், குடிநீர் கிடைக்கவில்லை. இதற்காக ரூ. 4 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. அதேசமயம், அங்கு மோட்டார்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றார்.
தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் செட்டிகுளம் பகுதியில் குளமே வெட்டாமல் தூர்வாரியதாக மோசடியில் ஈடுபட்ட விவகாரம் அண்மையில் தெரியவந்ததை அடுத்து,  ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு ஊராட்சிச் செயலரைப் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com